1 Feb 2010

பயணம்

 


"கேளுடே பண்டாரம், ஆத்ம பிரகாசம்னு ஒண்ணு உண்டு, ஆத்மா தன் வெளிச்சத்தை வெளிப்படுத்தற விதம் அது. இ.எம்.எஸ்ஸுக்கு ராஷ்ட்ரியம் ஆத்மபிரகாசம். சார்லஸ் சோப்ராஜுக்கு திருடினா அத்மபிரகசம். ஒரோத்தருக்கு ஒரோன்னு. ஒராளோட காரியம் மற்றவர்க்கு புரியாது. அதான் மனுஷனுக்க காரியம்".
                                                                                            -ஏழாம் உலகம், ஜெயமோகன்.

  
    என்ன நீ யாருடா அப்படின்னு யாராவது கேட்டா நான் ஒரு பயணின்னு சொல்லிக்கத்தான் ஆசைபடுவேன். என்னோட ஆத்ம சந்தோசம் பயணம்தான். பயணம் தருகிற சந்தோசங்களும் அனுபவங்களும் அலாதியானவை, அதை அவ்வளவு எளிமையாக வார்த்தைபடுத்திவிட முடியாது. பத்து நாவல்களை படித்து கிடைக்கிற அனுபவத்தைவிட ஒரு பயணத்தில் கிடைக்கிற அனுபவம் பெரியது. பயணத்தின்பொழுது நீங்க சந்திக்கிற ஒவ்வொரு மனிதர்களும் ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு புதிய விஷயத்தை சொல்லித்தரும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வாழ்க்கை ஒவ்வொருவிதமான அனுபவங்கள், கதைகள் இருக்கின்றன.என்னை பொறுத்தவரை நான் பழகிய மனிதர்களைவிட நான் என் பயணத்தின் போது சந்தித்த மனிதர்கள் மிக நல்லவர்கள்.

       பயணத்தில இரண்டு வகை உண்டு. ஒண்ணு ஒரு ஆறேழு பேரோட கும்பலா ஜாலியாக செல்வது. இதில் எங்க போகபோறோம் எங்க தங்க போறோம் என்பதெல்லாம் முன்கூட்டியே திட்டமிடபட்டிருக்கும். இது முழுக்க முழுக்க புறசந்தோசங்களை அடிப்படையாக கொண்டிருக்கும். அனுபவம் என்பது இராண்டாம் பட்சம்தான். இன்னொன்று தனியாகவோ அல்லது ஒத்த கருத்துடைய இரண்டுமூன்று நபர்களுடனோ செல்வது. இதில் எந்த முன் திட்டமிடலோ இருக்காது. பயணிக்கணும் அவ்ளோதான். இது முழுக்க அகசந்தோசங்களை அடிப்படையாக கொண்டது. இப்படி செல்பவர்களுக்கு உள்ளுக்குள் ஒரு தவிப்பு இருக்கும். எனக்கு மிக பிடித்தது இரண்டாம் வகைதான்.

          பயணித்து பாருங்கள்... உங்களுக்கு தெரியாத எத்தனையோ முகங்கள் வாழ்க்கை கதைகள் தெரியவரும். பயணியுங்கள் காலம் ஆற்றாத காயங்களை கூட பயணங்கள் ஆற்றும். அது நிறைய கற்றுத்தரும்.